Sunday 4 July 2021

ஹிரண்யகசிபு வதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 39

(ஹிரண்யகஷிபோர்வதோ ப்ரஹ்மக்ருதா ந்ருஸிம்ஹஸ்துதிஷ்ச )

Hiranyakashipu killed | Bhavishya-Parva-Chapter-39 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஹிரண்யகசிபுவைக் கொன்ற நரசிம்மன்; பிரம்மன் சொன்ன நரசிம்ம துதி...

Lord Narasimha killing Hiranyakashipu

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஆதித்யர்கள், சாத்யர்கள், விஷ்வர்கள், மருத்துகள், ருத்திரர்கள், தேவர்கள், மஹாத்மாக்கள், பெருஞ்சக்திவாய்ந்த வசுக்கள்,(1) தேவர்கள் ஆகியோர் அனைவரும் உலகின் வீழ்ச்சியால் அச்சமடைந்து, ஒடுக்கப்பட்டவர்களாகச் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த மிருகேந்திரனிடம் சென்று,(2) "ஓ! தேவா, உலகை அழிப்பவனும், ஒழுக்கங்கொண்டவனும், தீமைகளைச் செய்பவனுமான இந்தத் திதியின் மகனையும் {ஹிரண்யகசிபு}, அசுரர்கள் அனைவரையும் கொல்வாயாக.(3) ஓ! தைத்தியர்களை அழிப்பவனே, இந்தத் தைத்தியர்கள் அனைவரையும் கொல்பவன் நீயே. வேறு யாரும் இல்லை. உலகின் நலத்திற்காகவும், நன்மைக்காகவும் இவர்களை அழிப்பாயாக.(4) உலகங்கள் அனைத்தின் ஆசான் நீயே. பெரும்பாட்டனும் {பிரம்மனும்}, இந்திரனும் நீயே. உண்மையில், கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் உன்னையன்றி வேறு புகலிடம் ஏதும் கிடையாது" என்றனர்.(5)

தொடக்கத்தில் தேவர்களில் பிறந்த அந்தத் தலைவன், இந்தச் சொற்களைக் கேட்டுப் பேரொலியுடன் முழங்கினான்.(6) பேரான்மாவான அந்த மிருகேந்திரன், சிங்க முழக்கம் செய்து தைத்தியேந்திரர்களின் இதயங்களையும், மனங்களையும் உற்சாகமிழக்கச் செய்தான்.(7) குரோதவாச, காலகேய, வேக, வைகதேய, துணிவுமிக்கச் சைம்ஹிகேய கணங்களும்,(8) ஸம்ஹ்ராதீய, மஹாநாத, மஹாவேக, கபில, மஹீபுத்ர, வியாக்ராக்ஷ, க்ஷிதிகம்பன கணங்களும்,(9) வானுலாவிகளும், இரவுலாவிகளும், பாதாளவாசிகளும், மேகநாதன், அங்குஷாயுதன்,(10) ஊர்தவேகன், பீமவேகன், பீமகர்ம, அர்கலோசனட், வஜ்ரீ, ஷூலி, கராலன், ஹிரண்யகசிபு உள்ளிட்ட அசுரர்களும் {நரசிம்மனுடன்} போரிட்டுக் கொண்டிருந்தனர்(11)

அடர்மேக வடிவம் கொண்டவனும், மேக வேகம் கொண்டவனும், மேகமாக முழங்குபவனும், மேகமாக ஒளிர்பவனும்,(12) தேவர்களின் பகைவனும், திதிக்குப் பிறந்தவனும், செருக்குமிக்கவனுமான ஹரிண்ய கசிபு, நரசிம்மனை நோக்கி விரைந்தோடி தன் கூட்டத்தாருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மஹாத்மாவான அந்த மிருகேந்திரனை அடைந்தான்.(13) அப்போது அந்த மிருகேந்திரன் {நரசிம்மன்}, முன்னே சாடி குதித்து, ஓங்காரத்தின் துணையுடன் தன் பெரும் நகங்களால் ஹிரண்யகசிபுவின் உடலைத் துண்டுகளாகக் கிழித்து அந்தப் போரில் அவனைக் கொன்றான்.(14) அந்தத் திதியின் மகன் {ஹிரண்யகசிபு) அழிந்ததும், பூமி {நிலம்}, உலகம், சந்திரன், வானம், சூரியன், திசைகள், ஆறுகள், மலைகள், பெருங்கடல்கள் ஆகியன அனைத்தும் ஒளியூட்டப்பட்டன.(15) அப்போது, தேவர்களும், தவத்தையே செல்வமாகக் கொண்ட ரிஷிகளும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் பல பாடல்களால் அந்த நித்திய தலைவனைத் துதித்து அவனை மகிழ்ச்சியடையச் செய்தனர்.(16)

தேவர்கள், "ஓ! தலைவா, கடந்த காலம், நிகழ் காலம் ஆகியவற்றின் காரணக் காரியங்களை அறிந்த ஞானிகளால், நீ ஏற்றிருக்கும் இந்த நரசிங்க வடிவம் வழிபடப்படும். உலகங்கள் அனைத்திலும் இந்த மிருகேந்திரனை அனைத்து உயிரினங்களும் துதிக்கும்.(17) முனிவர்கள் எப்போதும் உன்னை மிருகேந்திரனான நரசிம்மனாகப் பாடுவார்கள். ஓ! தலைவா, உன் விருப்பத்தால் நாங்கள் எங்கள் இடங்களை மீளப்பெற்றோம்" என்றனர்.(18)

தேவகணங்களால் இவ்வாறு துதிக்கப்பட்ட நரசிம்மன் பெரும் நிறைவடைந்தான். அப்போது பிரம்மனும் நிறைவடைந்து, விஷ்ணு ஸ்தோத்திரத்தைச் சொன்னான்.(19) பிரம்மன், "ஓ! தலைவா, வீழ்ச்சியற்றவன் நீயே, வெளிப்படாதவன் நீயே, கற்பனைக்கெட்டாதவன் நீயே, புதிரானவனும், சிறந்தவனும் நீயே, உயர்ந்தவனும், மாற்றமில்லாதவனும் நீயே, படைப்பாளனற்ற நித்திய படைப்பாளியும் நீயே. சிதைவற்றவன் நீயே.(20) நித்தியனும், நிலைத்தவனுமான புருஷன் நீயே. கோட்பாடுகளின் பொருளில் நிறுவப்படும் சாங்கிய யோகத்தில் நிலைக்கும் புத்தியைக் குறித்து அறிந்த ஞானாத்மா நீயே.(21) வெளிப்பட்டவனும், வெளிப்படாதவனும் நீயே. மொத்த அண்டமூம் நீயே. ஓ! தலைவா, நாங்களும் நீயே. ஆன்மா நீயே, தலைவன் நீயே.(22) நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட உடலைக் கொண்டவன் நீயே, உலகங்கள் அனைத்தின் ஆசானும் தலைவனும் நீயே. ஆயிரக்கணக்கான நான்கு யுகங்களில் உலகங்கள் அனைத்தையும் அழிப்பவனை அழிப்பவன் நீயே.(23) நான்கு வேதங்களும், நான்கு ஹோத்ரங்களும், நான்கு ஆன்மாக்களும் நீயே, நித்தியன் நீயே. அனைத்து உயிரினங்களின் புகலிடம் நீயே. எல்லையற்ற பலமும், வலிமையும் கொண்டவன் நீயே. கபிலர் முதலிய யதிகளின் பரமகதி நீயே.(24) தொடக்கமும், நடுநிலையும், முடிவும் அற்றவன் நீயே. அண்டத்தின் ஆன்மா நீயே. புருஷர்களில் சிறந்தவன் {புருஷோத்தமன்} நீயே. படைப்பவன் நீயே, அழிப்பவன் நீயே. மக்களின் நலத்தில் கவனம் கொண்ட ஒரே ஒருவன் நீயே.(25) பிரம்மனும், ருத்திரனும், பெரும் இந்திரனும், வருணனும், யமனும் நீயே. செயலைச் செய்பவன் நீயே, செய்த செயலில் இருந்து விடுவிப்பவனும் நீயே. வீழ்ச்சியில்லாத உலகத்தலைவன் நீயே.(26)

பரம சித்தியும் {திறனில் உயர்ந்தவனும்}, பரம தேவனும் {தேவர்களில் மேலானவனும்}, பரமமந்திரமும் {மந்திரங்களில் மேன்மையானவனும்}, பரம மனதும் {மனத்தில் மேன்மையானவனும்}, பரம தர்மமும், பரம புகழும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(27) பரம சத்தியமும், பரம ஹவிஸும், பரம பவித்ரமும், பரம மார்க்கமும், பரம ஹோத்ரமும், பரம யஞ்ஜமும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(28) பரம உடலும், பரம வசிப்பிடமும், பரம யோகமும், பரம வாக்கும், பரம ரகசியமும், பரம கதியும், பரம பிரபுவும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(29) முதன்மையானவர்களில் மிக உயர்ந்தவனும், தேவர்களில் மிக உயர்ந்தவனும், தலைவர்களில் மிக உயர்ந்தவனும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(30) முக்கியமானவற்றில் மிக உயர்ந்தவனும், கோட்பாடுகளில் மிக உயர்ந்தவனும், படைப்பாளர்களில் மிக முதன்மையானவனும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(31) ரகசியங்களில் மிக உயர்ந்தவனும், உயர்ந்தவற்றில் மிக உயர்ந்தவனும், உயர்ந்த தவமும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(32) புகலிடங்கள் அனைத்திலும் மிக உயர்ந்தவன் நீயே, வடிப்பிடங்களில் மிக உயர்ந்தவன் நீயே, தலைமைத்துவங்களில் மிக உயர்ந்தவன் நீயே, புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே" என்று துதித்தான் {பிரமம்ன்}.(33)

உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனால் இவ்வாறே பகவான் துதிக்கப்பட்டான். தலைவனான நாராயணனைத் துதித்துவிட்டு தலைவன் பிரம்மன் பிரம்மலோகத்திற்குச் சென்றான்.(34) இசைக்கருவிகள் இசைக்கப்பட, அப்சரஸ்கள் நடனமாட, பாற்கடலின் வடகரைக்கு ஈஷ்வரன் {நரசிங்கனான விஷ்ணு} சென்றான்.(35) கருடனைத் தன் கொடியில் கொண்ட தலைவன், நரசிங்க வடிவை விட்டு அகன்று, (உரிய இடத்தில்) உடலை நிறுவி தன் அசல் வடிவை ஏற்றுச் சென்றான்.(36) இயற்கையின் தலைவனும், வெளிப்படாதவனுமான அந்தத் தலைவன், காந்தியால் ஒளிர்வதும், எட்டுச் சக்கரங்களைக் கொண்டதுமான வாகனத்தில் தன் இடத்திற்குச் சென்றான்.(37) இவ்வாறே நீண்ட காலத்திற்கு முன்பு நரசிம்ம உடலைக் கொண்டவனும், பேரான்மாவுமான தலைவனால் ஹிரண்யகசிபு கொல்லப்பட்டான்" என்றார் {வைசம்பாயனர்}[1].(38)

[1] மன்தநாததத்தரின் பதிப்பில் இந்த அத்தியாயம் 10 ஸ்லோகங்களைக் கொண்ட சிறு பகுதியாக இருக்கிறது. எனவே இந்த அத்தியாயம் முழுமையும் சித்திரசாலை பதிப்பைப் பின்பற்றியே மொழிபெயர்க்கப்பட்டது.

பவிஷ்ய பர்வம் பகுதி – 39ல் உள்ள சுலோகங்கள் : 38

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English