Sunday, 29 March 2020

ரைவதனும் அவனது மகன்களும் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 11

(துந்துவதம்)

Account of Raivata and his sons - Elimination of demon Dundhu  | Harivamsa-Parva-Chapter-11 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : சிராவஸ்தி என்ற நகரை நிர்மாணித்த சிராவன்; பிருஹதாஷ்வன் கானகம் புக விரும்பியது; உதங்கர் தடுத்தது; பிருஹதாஷ்வனின் மகன் குவலாஷ்வன்; துந்துவைக் கொன்ற குவலாஷ்வன்...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, ரேவதியும், குகுத்மியான ரைவதனும்[1] பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலும் ஏன் முதுமையை அடையாமல் இருந்தனர்.(1) மேரு மலைக்குச் சென்ற பிறகும் கூட ஸர்யாதியின் பேரன் இந்த உலகில் இன்னும் வாழ்வது ஏன்? இவையனைத்தையும் நான் உண்மையாகவே கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.(2)


[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் இங்கு "குகுத்மியின் மகனான ரேவதன்" என்று இருக்கிறது. மற்ற பதிப்புகளை ஒப்பிட்டு இங்கே பிழைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாவமற்றவனே, ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, பிரம்மலோகத்தில் முதுமையோ, பசியோ, தாகமோ, மரணமோ, பருவ கால மாற்றமோ கிடையாது.(3) ரேவதனின் மகனான குகுத்மி {ரைவதன் - பிரம்ம லோகத்திற்குச்} சென்ற பிறகு அவனது நகரமான குசஸ்தலை ராட்சசர்களாலும், பிசாசுகளாலும் {புண்யாஜனங்கள் / யக்ஷர்களாலும்} அழிக்கப்பட்டது.(4) உயரான்மாவும், அறவோனுமான அந்த மன்னனுடன் பிறந்தோர் நூறு பேர் இருந்தனர். ராட்சசர்கள் அழிவுத்தொழிலைச் செய்யத் தொடங்கிய போது, அவர்கள் அனைவரும் பல்வேறு திசைகளில் தப்பி ஓடினர்.(5) ஓ! மன்னர்களின் மன்னா, உடன்பிறந்தோர் நூறுபேரும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிலைத்த பிறகு அங்கே இருந்த க்ஷத்திரியர்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர்.(6) ஓ! மன்னா, நாடுகள் அனைத்திலும் அவர்களது குடும்பங்கள் பரந்திருந்தன, மேலும் அவர்கள் ஸார்யாதர்கள் என்று அறியப்பட்டனர்.(7) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, அறவோரான அந்த க்ஷத்திரியர்கள் அனைத்துப் பகுதிகளிலும் வசித்தனர். ஓ! குருக்களின் வழித்தோன்றலே, அவர்களில் பலர் மலைசார்ந்த பகுதிகளில் நுழைந்தனர்[2].(8)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ரைவதன் குகுத்மி பிரம்மனின் வசிப்பிடத்திற்குச் சென்றபோது, ராட்சசர்களும், புண்யாஜனங்களும், அதாவது யக்ஷர்களும் அவனுடைய தலைநகரான குசஸ்தலையையும், அதனோடு சேர்த்து அவனுடன் பிறந்த நூறுபேரையும் அழித்தனர். இவ்வாறு ராட்சசர்கள் அழித்துக் கொண்டிருந்தபோது, அவனது உற்றார் உறவினரில் சிலர் பாதுகாப்பான புகலிடத்தைத் தேடி அனைத்துத் திசைகளிலும் அங்கேயும், இங்கேயும் தப்பிச் சென்றனர். அகதிகளான அந்த க்ஷத்திரியர்கள், ராட்சசர்களிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக மலைக்குகளைத் தங்கள் மறைவிடமாக அமைத்துக் கொண்டு அங்கேயும் இங்கேயும் வாழ்ந்தனர். அவர்கள் ஏங்கே இருந்தாலும் அவர்களது சந்ததி பெருகியது, இவ்வாறு அவர்கள் அனைவரும் ஸர்யாதியின் மரபு வழியினராக அறியப்படலாகினர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "குகுத்மி ரைவதன் அந்த உலகத்திற்குச் சென்றான். ஓ! மகனே, அந்நேரத்தில், ராட்சசர்கள் குசஸ்தலையில் இருந்த நன்மக்களைக் கொன்றனர். அவனுடன் பிறந்த நூறு பேரும் உயரான்மா கொண்டவர்களாகவும், அறத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் இருந்தனர். அவர்கள் ராட்சசர்களால் கொல்லப்படாவிட்டாலும் வெவ்வேறு திசைகளுக்குத் தப்பி ஓடினர். ஓ! பூமியின் தலைவா, ஓ! பெரும் மன்னா, அந்த மிகப் பெருங்குலத்தினர் சார்யாதிகள் என்றே அறியப்பட்டனர்" என்றிருக்கிறது.

நாபாகாரிஷ்டனின் இரு மகன்களும், வைசியத் தாய்க்குப் பிறந்திருந்தாலும் பிராமண நிலையை அடைந்தனர். கரூஷனின் மகன்கள், காரூஷர்கள் என்ற பெயரைக் கொண்டவர்களும், போரில் பயங்கரமான க்ஷத்திரியர்களாகவும் இருந்தனர்.(9) பிராங்சுவின் {பிரமசுவின்} ஒரே மகன் பிரஜாபதி என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான்[3]. ஓ! ஜனமேஜயா, அந்தப் பிருஷதன், தன் ஆசானின் பசுவைக் கொன்றதால் சூத்திரப் பிறவியை அடைந்தான் என்று சொல்லப்படுகிறது. ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, இவ்வாறே நான் வைவஸ்வத மனுவின் ஒன்பது மகன்களைக் குறித்துச் சொன்னேன்[4].(10,11)

[3] ஹரிவம்ச பர்வம் பகுதி 10, 31ம் ஸ்லோகத்தில் இவரனது பெயர் ஷர்யாதி என்றிருக்கிறது.

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "நாபாகனின் மகனும், அரிஷ்டனின் மகனும் வைசியர்களாக இருந்தாலும், பிராமணர்களானார்கள். காரூஷனின் மகன்கள் போர்க்களங்களில் மட்டற்றவர்களாக இருந்த க்ஷத்திரிய வீரர்களானார்கள். பிரஜாபதி மனுவின் ஆறாவது மகனான பிராங்சு, பிரஜாதி என்ற பெயரில் ஒரு மகனையும், ஆசானின் பசுவுக்குத் தீங்கிழைத்ததால் புழுவாகும்படி நேர்ந்த பிருஷத்ரன், அல்லது பிருஷத்யு என்ற பெயரில் மற்றொரு மகனையும் கொண்டிருந்தான். அவனது ஆசான் அவனைப் புழுவாகும்படி சபித்தார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நாபாகனின் வைசிய மகன்கள் இருவரும் பின்னர்ப் பிராமணர்களானார்கள். கரூஷனின் மகன்கள் காரூஷர்கள் என்றறியப்பட்ட க்ஷத்திரியர்களானார்கள், மேலும் அவர்கள் போரில் வெல்லப்படமுடியாதவர்களாக இருந்தனர். ஓ! ஜனமேஜயா, பிருஷதனர்கள், தங்கள் ஆசானின் பசுவைக் கொன்றதால் அவர்கள் சூத்திரர்களானார்கள்" என்றிருக்கிறது. இவ்வாறு மூன்று பதிப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருக்கின்றன.

மனு தும்மியபோது, அவனது நாசியில் இருந்து இக்ஷ்வாகு என்ற பெயரில் ஒரு மகன் வெளியே வந்தான். அவன் அபரிமிதமான கொடைகளை அளித்த நூறு மகன்களைக் கொண்டிருந்தான்.(12) அவர்களில் மூத்தவன் விகுக்ஷி, பெருத்த வயிற்றைக் கொண்டவனாக இருந்ததால், அவனால் போர்வீரனாக முடியவில்லை, அறவோனான அந்த மன்னன், அயோத்யையின் தலைவனாக ஆட்சிபுரிந்தான்[5].(13) அவன் சகுனியின் தலைமையில் ஐம்பது சிறந்த மகன்களைக் கொண்டிருந்தான். ஓ! மன்னா, அவர்கள் அனைவரும் உத்தரபாத மாகாணத்தை {நாட்டின் வடக்கு மாகாணங்களைப்} பாதுகாத்து ஆட்சி செய்தனர்.(14) ஓ! மன்னா, சஷாதனின் தலைமையிலான முப்பத்தெட்டு மகன்கள் தெற்குப் பகுதியைக் காத்தனர்[6].(15) ஓர் அஷ்டக நாளில்[7] இக்ஷ்வாகு, விகுக்ஷியிடம், "ஓ! பெரும்பலம் கொண்டவனே, மானைக் கொன்று சிராத்தத்துக்கான இறைச்சியைக் கொண்டு வருவாயாக" என்றான்.(16) அந்தச் சிராத்தத்துக்காக ஒரு முயலின் இறைச்சியை எடுத்துக் கொண்டு சஷாதன் என்ற பெயருடன் அவன் வேட்டையில் இருந்து திரும்பினான்[8].(17) வசிஷ்டரின் சொற்களுக்கிணங்கிய இக்ஷ்வாகுவால் அவன் கைவிடப்பட்டான். இக்ஷ்வாகு இறந்த பிறகு சஷாதன் {விகுக்ஷி} (அயோத்யா) நகரில் வாழத் தொடங்கினான்.(18)

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "இக்ஷ்வாகு மன்னனின் நூறு மகன்களில் விகுக்ஷி மூத்தவனாவான். அவன் போர்வீரனுக்குரிய மிக அகன்ற மார்பைக் கொண்டிருந்ததால், தாக்கப்படமுடியாத போர்வீரனாகி அயோத்யாவின் மன்னனானான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவர்களில் விகுக்ஷி மூத்தவனாக இருந்தான். அவன் அகன்ற மார்பை {அல்லது வயிற்றைக்} கொண்டவனாக இருந்ததால், போரில் வீழ்த்தப்பட முடியாதவனாக இருந்தான். தர்மத்தில் பேரர்ப்பணிப்புடன் இருந்த அவன் அயோத்யாவின் மன்னனானான்" என்றிருக்கிறது.

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "உயர்ந்த அறவோனான இந்த விகுக்ஷிக்கு, சகுனி முதலிய ஐம்பது சிறந்த மகன்கள் இருந்தனர். இந்த இளவரசன் சகுனியும், அவனுடன் பிறந்தவர்களில் ஒருவனும் வடக்குப் பகுதியில் இருந்து நாட்டின் வடக்கு மாகாணங்களை அறவழியில் பாதுகாத்தான். எஞ்சிய நாற்பத்தெட்டு இளவரசர்களும் சஷாதன் என்ற பட்டப் பெயரைக் கொண்ட தங்கள் தந்தை விகுக்ஷியுடன் சேர்ந்து தென் மாகாணங்களைப் பாதுகாத்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இக்ஷ்வாகுவுக்கு, சகுனி முதலிய ஐம்பது மகன்கள் இருந்தனர். ஓ! பூமியின் தலைவா, அவர்கள் உத்தரபாத நாட்டை {ஜம்புத்வீபத்தின் வடக்குப் பகுதியைப்} பாதுகாத்தனர். ஓ! பூமியின் தலைவா, வசாதி முதலிய அவனுடைய வேறு நாற்பத்தெட்டு மகன்கள், தெற்குத் திசையைப் பாதுகாத்தனர்" என்றிருக்கிறது. இங்கே பிபேக்திப்ராயின் உரையே சரியாக இருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.

[7] "பித்ருக்கள் வழிபடப்படும், மூன்று மாதங்களின் எட்டாவது நாள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[8] "குழிமுயல் இறைச்சியை உண்பவன் என்ற பொருளைத் தரும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "அஷ்டக சிராத்தம் என்றழைக்கப்படும் பித்ருக்களுக்கான சடங்கிற்காக வேட்டையாடி இறைச்சியைக் கொண்டுவருமாறு மன்னன் இக்ஷ்வாகு தன் மகன் விகுக்ஷியிடம் ஆணையிட்டான். அவ்வாறு வேட்டைக்குச் சென்ற விகுக்ஷி, முதலில் ஒரு முயலை வேட்டையாடி, அதைச் சுட்டுத் தின்றான். இவ்வாறு, சடங்கிற்கான பொருட்களைக் கொள்ளும் முயற்சியில் இருக்கும்போது அவன் தன் நலனுக்கெனச் சிறிதளவைப் பயன்படுத்திக் கொண்டான். பிறகு அவன் மேலும் சில விலங்குகளை வேட்டையாடி, பித்ருக்களின் சடங்குக்காக இறைச்சியைக் கொண்டு வந்தான். இதன்மூலம் அவன் கொண்டு வந்த இறைச்சி தீட்டுப்பட்டது. அவன் தன் சொந்த வயிற்றை நிறைவடையச் செய்த பின்னர்க் காணிக்கைப் பொருளை அடைந்தான். எனவே அவன் சஷாதன் என்ற பட்டப்பெயரைப் பெற்றான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "வயிறு நிறைய உணவு உண்ட பிறகு சிறு துண்டை தேவர்களுக்குக் காணிக்கையளிப்பது முறையாமோ? ’இன்று எங்களுக்கான உணவைக் கொடுத்தீர்கள். இஃது உண்மையில் உங்களுடையது. எங்கள் காணிக்கைக்கான அடையாளச் சின்னமாக முதலில் நீங்கள் உண்ணுங்கள்’ என்று சொல்வது நிவேதனம் என்றழைக்கப்படுகிறது. அதே வேளை அந்தக் காணிக்கை நைவேத்யமாகிறது. இவ்வாறு நாம் காணிக்கை அளிக்கும் போது, தேவன் அதை உண்டான் என்று உணர்ந்ததும், அதே காணிக்கை உடனடியாக உண்ணத்தக்க புனிதமான பிரசாதம் ஆகிறது. சாதம் என்ற சம்ஸ்கிருதச் சொல் இன்னும் தமிழ் மொழியில் நீடித்திருக்கிறது. இரண்டு நிலையிலும் சிலையிலோ, படத்திலோ உள்ள தேவன் நேரடியாக வந்து நாம் வைக்கும் உணவுகளை உண்பதில்லை. ஆனால் அவ்வாறு சிலைக்கோ, படத்திற்கோ காணிக்கை அளிப்பது, நம்மிடம் தன்னலமில்லை என்பதைக் குறிக்கிறது. இங்கே இவன் உண்டபிறகு பித்ருக்களுக்குக் கொடுப்பது எச்சில் என்று கருதப்படும். அவ்வகையான உணவு நாய்களுக்கே கொடுக்கப்படும். பொதுவாக மூன்று மணி நேரத்திற்கு முன்பு தயாரிக்கப்படும் உணவு உண்ணத்தக்கதல்ல எனும்போது, ஏற்கனவே உண்டதை பித்ருக்களுக்குப் படைப்பது முறையாகாது" என்றிருக்கிறது.

சஷாதனின் {விகுக்ஷியின்} மகனே பலமிக்கக் ககுத்ஸ்தனாவான். பழங்காலத்துப் போர்களில், காளையின் வடிவில் இருந்த இந்திரனின் திமிலில் அமர்ந்து கொண்டு அசுரர்களை வீழ்த்தியதால் அவன் ககுத்ஸ்தன் என்றழைக்கப்பட்டான். ககுத்ஸ்தனின் மகன் அனேனன், அவனுடைய மகன் பிருது ஆவான்.(19,20) பிருதுவின் மகன் விஷ்டராஷ்வன், அவனிடம் இருந்து ஆர்த்ரன் பிறந்தான். ஆர்த்ரனின் மகன் யுவனாஷ்வன், அவனுடைய மகன் சிராவன் ஆவான்.(21) மன்னன் சிராவன், சிராவஸ்தி என்ற பெயரில் ஒரு நகரத்தை அமைத்தான். அவனுடைய மகன் பெருஞ்சிறப்புமிக்கப் பிருஹதாஷ்வனாவான்.(22) அவனுடைய மகனே, உயர்ந்த அறவோனான குவலாஷ்வன் ஆவன். (அசுரனான) துந்துவைக் கொன்றதன் மூலம் அவன் மன்னன் துந்துமாரன் என்றானான்" {என்றார் வைசம்பாயனர்}.(23)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பிராமணரே, குவலாஷ்வன் எதன் காரணமாகத் துந்துமாரன் என்ற பெயரில் அழைக்கப்பட்டானோ அந்தத் துந்துவின் அழிவைக் குறித்து உள்ளபடியே கேட்க விரும்புகிறேன்" என்றான்.(24)

வைசம்பாயனர் சொன்னார், "திறன்மிக்க வில்லாளிகளும், நல்ல கல்விமான்களும், தடுக்கப்பட முடியாதவர்களும், அறவோரும், வேள்விகளைச் செய்தோரும், அபரிமிதமான கொடைகளை அளித்தோருமான நூறு மகன்களைக் குவலாஷ்வன் கொண்டிருந்தான். பிருஹதாஷ்வன் தன் மகன் குவலாஷ்வனை அரசில் நிறுவினான்.(25,26) அவன், அரசின் பொறுப்பைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டுக் காட்டுக்குச் சென்றான். ஆனால், உதங்க முனிவர் (அவன் அவ்வாறு செய்வதில் இருந்து) அவனைத் தடுத்தார்[9].(27)

[9] மன்மதநாததத்தரின் பதிப்பில் குவலாஷ்வன் மற்றும் பிருஹதாஷ்வன் என்ற பெயர்கள் மாறி மாறி வந்திருக்கின்றன. உண்மையில் மற்ற இரண்டு பதிப்புகளிலும், "பிருஹதாஷ்வன், குவலாஷ்வனை அரசில் நிறுவினான். தன் மகனை அரசில் நிறுவிட்டு விட்டு அந்த மன்னன் காட்டுக்குச் சென்றான். அப்போது உதங்க முனிவர் அவனைத் தடுத்தார்" என்றே இருக்கிறது. எனவே மேற்கண்ட பத்தி அந்தப் பிழைநீக்கம் செய்யபட்டு உரைக்கபட்டிருக்கிறது.

அவர் {உதங்கர்}, "ஓ! மன்னா, நீ உன் குடிமக்களைப் பாதுகாப்பதை உனக்குத் தகும். (நாடு தொடர்பான) கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு நீ தவம் செய்யலாகாது.(28) ஓ! மன்னா, உயரான்மா கொண்டவனான உன்னால் பூமி பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்துக் கவலைகளையும் புறந்தள்ளிவிட்டு நீ காடுகளுக்குள் நுழையக்கூடாது.(29) குடிகளைக் காப்பதில் பேரறம் காணப்படுகிறது. ஆனால் காட்டுக்குச் செல்வதில் அவ்வாறில்லை.(30) மன்னனின் கடமை இவ்வாறே உயர்த்திக் காட்டப்படுகிறது. பழங்காலத்து அரசமுனிகளும் தங்கள் குடிமக்களைப் பாதுகாத்தனர். எனவே, நீ உன் குடிமக்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.(31) என் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள சம தளத்தில், சிறிதளவே தண்ணீராலும், உஜ்ஜனகம் {மக்களற்றது} என்றழைக்கப்படும் மணலாலான பெருங்கடலாலும் நிறைந்த ஒரு பாலைவனம் இருக்கிறது. பேருடல் படைத்தவனும், தேவர்களாலும் அழிக்கப்பட முடியாதவனும், பெருசக்தி கொண்டவனுமான ஒருவன் (ஓர் அசுரன்) மணல் நிறைந்த அந்தக் களத்திற்குள் நுழைந்திருக்கிறான். மது என்ற ராட்சசனுடைய மகனான அந்தப் பேரசுரன் துந்து என்ற பெயரால் அழைக்கப்படுகிறான். மனிதர்களை அழிப்பதற்காக அவன் அங்கே கடுந்தவம் செய்து கொண்டிருக்கிறான்.(32,33) அவன் ஓராண்டு முடிந்ததும் மூச்சு விடும்போது மலைகள், சோலைகள் மற்றும் காடுகளுடன் கூடிய பூமாதேவி நடுங்குகிறாள்.(34) அவனுடைய மூச்சால் கனமான புழுதி எழுந்து சூரியனின் பதையை மறைக்கிறது. பூமி ஒரு வார காலம் தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே தீப்பொறிகள் மற்றும் சாம்பல்களுடன் கூடிய புகை வெளிவருகிறது. ஓ! குழந்தாய் {பிருஹதஷ்வா}, அந்நேரத்தில் என்னால் ஆசிரமத்தில் வாழ முடியவில்லை.(35,36) எனவே, மனித குலத்தின் நன்மைக்காக அந்தப் பேருடல்படைத்த அசுரனைக் கொல்வாயாக. அந்த அசுரனின் அழிவில் மக்கள் சுகமடைவார்கள்.(37) ஓ! மன்னா, அவனைக் கொல்ல உன்னால் மட்டுமே முடியும். ஓ! பாவமற்றவனே, முந்தைய யுகத்தில் விஷ்ணு உனக்கொரு வரத்தைக் கொடுத்திருக்கிறான்.(38) அவன் {விஷ்ணு}, "பயங்கரம் நிறைந்தவனும், பெரும்பலம் கொண்டவனுமான அந்தப் பேரசுரனை எவன் கொல்லப் போகிறானோ அவன் ஒரு வரத்தால் என்னுடைய சக்தியை அடைவான்" என்று சொல்லியிருக்கிறான்.(39) ஓ! மன்னா, நூறு தேவ வருடங்கள் ஆனாலும் அற்ப சக்தியால் பெரும் பலம் கொண்ட அந்தத் துந்துவை எரிக்கமுடியாது. தேவர்களே கடினமாக முயன்றாலும் அவனை வெல்ல முடியாது என்ற அளவுக்குப் பெருஞ்சக்தி கொண்டவனாவான்" என்றார் {உதங்கர்}.(40) உயரான்ம உதங்கரால் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த அரச முனி {பிருஹதஷ்வன்}, துந்துவை அடக்குவதற்காகத் தன் மகன் குவலாஷ்வனை அனுப்பினான்.(41)

பிருஹதஷ்வன், "ஓ! மதிப்பிற்குரிய ஐயா, ஆயுதப் பயன்பாட்டை நான் கைவிட்டுவிட்டேன். ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இவன் என்னுடைய மகன், இவன் துந்துவை நிச்சயம் கொல்வான் (துந்துமாரன் என்ற பெயரையும் அடைவான்)" என்றான்.(42)

தற்கட்டுப்பாட்டுடன் கூடிய அந்த அரசமுனி {பிருஹதாஷ்வன்}, துந்துவை அழிக்கத் தன் மகனுக்கு {குவலாஷ்வனுக்கு} ஆணையிட்டுவிட்டு, தவம் செய்வதற்காக மலைக்குச் சென்றான்.(43) ஓ! மன்னா, குவலாஷ்வன், தன் நூறு மகன்களுடனும், அந்தத் தவசியுடனும் {உதங்கருடனும்}, துந்துவை அழிக்கப் புறப்பட்டான்.(44) தலைவனான தெய்வீக விஷ்ணு, மனித குலத்தின் நன்மைக்காகவும், உதங்கரின் வேண்டுகோளின்படியும் தன் சக்தியைக் கொண்டு அவனுக்குள் {குவலாஷ்வனுக்குள்} நுழைந்தான்.(45) அவன் புறப்பட்டதும், "அருள்நிறைந்தவனான இந்த இளவரசன் துந்துமாரனாவான்" என்று ஒரு பயங்கர ஒலி வானத்தில் கேட்டது[10].(46) பிறகு தேவர்கள், அவனுக்கு தெய்வீக மலர் மாலைகளைச் சூடினர். ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, தேவதுந்துபிகளும் ஒலித்தன.(47)

[10] "துந்துமாரன் என்றால் (அசுரன்) துந்துவைக் கொன்றவன் என்று பொருளாகும். அவனால் {குவலாஷ்வனால்} அசுரன் துந்து அழிந்தபிறகு இதுவே அவனது பட்டப்பெயரானது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

வெற்றியாளர்களில் சிறந்தவனான அந்தச் சக்திமிக்கவன் (குவலாஷ்வன்}, முடிவிலாததான அந்த மணலாலான பெருங்கடலுக்குச் சென்றதும், தன் மகன்களைக் கொண்டு அதை அகழ {தோண்டச்} செய்தான்.(47) ஓ! குருவின் வழித்தோன்றலே, நாராயணனின் சக்தியால் வலுவூட்டப்பட்ட அவன் பெருஞ்சக்திமிக்கவனாகவும், பலம் நிறைந்தவனாகவும் ஆனான்.(49) ஓ! மன்னா, அவனுடைய மகன்கள், மணலாலான பெருங்கடலைத் தோண்டியபோது, மேற்கில் கிடக்கும் துந்துவைக் கண்டடைந்தனர்.(50) அவன், தன் வாயிலிருந்து வெளிப்பட்ட நெருப்பின் மூலம் அந்தப் பகுதிகளைக் கோபத்துடன் எரிப்பதாகத் தெரிந்தது. ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, சந்திரன் எழுந்ததும் பெருகும் பெருங்கடலைப் போலவே, (அந்த அசுரனின் அசைவால்) பெரும் நீர்த்தாரைகள் பாயத் தொடங்கின. அந்த மன்னனின் நூறு மகன்களில் மூவரைத் தவிர அனைவரும் அந்த ராட்சசனால் {துந்துவால்} எரிக்கப்பட்டனர்.(51,52)

ஓ! குருவின் வழித்தோன்றலே, அதன்பிறகு பேராற்றல் கொண்ட மன்னன் துந்துமாரன், பெருஞ்சக்திகொண்ட ராட்சசன் துந்துவை எதிர் கொண்டான்.(53) அப்போது, அந்தத் தவசி (மன்னன்) தன் யோக சக்தியால், அவனது (ராட்சசனின்) நீர் சக்தியைக் குடித்து அந்த நெருப்பை நீரால் அணைத்தான்.(54) அந்த மன்னன் {குவலாஷ்வன் / துந்துமாரன்} தன் பலத்தால் அந்த நீராசுரனை {துந்துவைக்} கொன்றுவிட்டு, உதங்கரிடம் தன் வெற்றியை மெய்ப்பித்தான்[11].(55) உதங்கரும், அந்த உயரான்ம மன்னனுக்கு {துந்துமாரனுக்கு}, அளவிலா வளங்களையும் {வற்றாத செல்வத்தை}, பகைவரை வெற்றிக் கொள்ளும் நிலையையும் {ஆற்றலையும்}, அறத்தில் விருப்பத்தையும், சொர்க்கத்தில் நித்திய வசிப்பிடத்தையும், ராட்சசனால் கொல்லப்பட்ட அவனுடைய மகன்கள் நித்திய உலகத்தை அடையும் நிலையையும் வரமாக அளித்தார்.(56,57)

[11] மஹாபாரதத்தில், வன பர்வம் பகுதி 203ல் இக்கதை இன்னும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஹரிவம்ச பர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 57
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English